Wednesday 18 July 2007

மூன்றாம் ஆண்டு நினைவு [19-07-2007]



மூன்றாம் ஆண்டு நினைவு - கவிதைகளால் ஒரு அஞ்சலி
மூன்றாம் ஆண்டு நினைவில் என்ன செய்வது என்று புரியாமல் கவிதைகளால் அஞ்சலி செய்கிறார்கள் இவர்கள்...

யார் இவர்கள் என்று தொக்கி நிற்கும் கேள்வியை விடுங்கள்... ஏதோ ஒரு வகையில் இந்தக் குட்டிப் பெண்ணின் நினைவை இதயங்களில் ஏந்தியவர்கள் இவர்கள்...

என் மடியில்
பூத்திட்ட சின்ன
மலர் இவள்
என்னைத் தாயாக்கி
எனக்குத் தாயாகி
தன் சுவாசத்தை
எனக்காய் தந்து
இன்று என்
சுவாசத்தில் கலந்திட்டவள்
மீண்டும் பூவானாள்
இங்கே என்றும்
என்னோடு வாழும்
அவள் வாசம்
இந்த
கவிதைப் பூக்களில்
வாழ்வதால் என்
ஆத்மா சமர்ப்பணமானது
இங்கே...!






------கவி ரூபன் -----------------

சின்னப் பெண்ணே
நீ மறைந்து
மூன்றாண்டாம்
உன் நினைவு
மட்டும் எப்படி இன்னும்
எல்லோர் மனதிலும்
முரண்டு பிடித்து
முக்காலி போட்டு
உட்கார்ந்து இருக்கின்றது?
பக்கத்தில் இருந்து
பார்த்துப்
பழகியறியாதவன்
நான்...
இருந்தும் செவிவழி கேட்டு
நிழற்படத்தில் பார்த்துத்
தெரிந்த எனக்குள்ளும்
எப்படி நீ விஷ்வரூபமானாய்?
வாழ்க்கை
விசித்திரம் தான்
வந்து போகும்
உறவுகளும் அப்படியே...
யாரோ
கிழித்த கோட்டில்
நீயும் நானும்
எப்படிச் சொந்தங்களானோம்?
சாவு அருமையான
விஷயம்!
இறப்பது தெரிந்தும்
'நிரந்தர இருப்பு'
அனுமதி பெற்றது போல
செய்யும் செயல்களில்
தான் எத்தனை
முரண்பாடு?
குட்டிப் பெண்ணே
நினைவுச் செதில்கள்
குற்றி
கண்கள் குளமாகின்றது
உண்மை தான்
ஆனாலும்
வெறும் வார்த்தை
ஜாலங்களில்
பாசாங்கு செய்யப்
பிடிக்கவில்லை
மறுபிறவி
உண்டெனின்,
எனக்கு மகளாய்
வந்து பிறவேன்
மகிழ்ந்து விளையாடலாம்!
எவ்வளவு அழகாய்
முடிச்சுக்கள்
விழுகின்றது...
வாழ்க்கை அழகு தான்
அவரவர் புரிதல் படி!
பெண்ணே
நினைவுக் கவிதை
என்று நினைத்து தான்
தொடங்கினேன்
ஆனால்
வாழ்க்கையின்
வடிவான பக்கங்களைப்
புரட்டத் தொடங்கிவிட்டேன்
உதிருகின்ற
பூக்களைப் பார்த்து
அழுவதைவிட்டு
மலருகின்ற பூக்களைப் பார்த்து
மகிழ்வதே
உன் நினைவு
எனக்குச் சொல்லும்
பாடம்!
உன் நினைவை
ஏந்திக் கொண்டு
வாழ்வென்னும் பெருங்கடலில்
நீந்தப் போகின்றேன்
ஒரு சமயம்
இருவரும் சந்திக்கலாம்!

[http://kaviyarankam.blogspot.com/2007/07/blog-post.html]

-------சுபா (சித்தி) ----

பூவொன்று
உதிர்ந்ததென்று
தாயின்று அழுகையிலே
விழிநீர் துடைப்பதா
விம்மல் அடக்குவதா
அல்லல் துடைக்கும்
கையொன்று எப்போதும்
ஆறுதலாய் பற்றுமென்று
தோளினைப் பற்றுவதா?
எதுவும் தோன்றாமல்
மனசுக்குள் மானசீகமாய்
மங்களங்கள் தோன்றட்டும்
என்று
மகேசனை வேண்டுவதா?
நீ
சிரிக்கும் போது
சிரிக்கவும்
அழும்போது
விழிநீர் துடைக்கவும்
நல்ல உள்ளங்கள்
சுற்றி இருக்க
சோகமென்ன என்றுரைப்பது
தானே சரி?!

----அம்மம்மா அப்பப்பா.......

எங்கள் முதல் முத்து
நீயம்மா எங்கள்
முதல் சொத்தும்
நீயம்மா காலங்கள்
கடந்தும் மறந்திடா
உறவும் நீயம்மா
உன் அன்னையின்
ஆராக் காயமும்
நீதான்னம்மா

........சித்தப்பா சித்தி....
உனக்காய் தேடித்
தேடித் நான்
அனுப்பிய அத்தனை
வாழ்ந்துக்களும்
உன் அன்னையிடம்
ஆனால் நீயோ.....
இறைவனிடம்
..............மாமா........
வெண்பனியில்
உன்னை நனைத்து
நான் ரசிக்க
என்னோடு சண்டை
போட்டவளோ....
இப்போது பனிகாலத்து
நினைவு நீயம்மா
...........மாமா சித்தி.....
உன்னை பார்கவில்லை
அதனால் நாங்கள்
உன்னை மறக்காது
தவிக்கும் அன்னைக்காய்
அழுகின்றோம்
..................நட்பு ..உறவுகள்..
சின்ன வயதிலே
பாசத்தின் ஆழம்
சொன்னவள் நீ
அழகின் ரசனை
சொன்னவள் நீ
குறும்பால் கவர்ந்தவள் நீ
அந்ததனையும் நினைவாய்
இருக்க நீமட்டும்
நிழலாய் ஏன்
மறைந்தாய்
............................

கீர்த்தன அர்ச்சணா....

உன் நினைவுகளை
நாங்களும் மறக்காது
எங்கள் இதயபூர்வமான
கண்ணீர் அஞ்சலியை
மீண்டும் மீண்டும்
செய்கின்றோம்....

No comments: